By November 30, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

அழுத்தமான கொள்கை கோட்பாடுகளை கொண்ட நீங்கள், பகைவனுக்கும் உதவும் பரந்த மனசுக்கு சொந்தக்காரர்கள். இதுவரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்த வேலையையும் எளிதில் முடிக்கும் சாமர்த்தியத்தையும், மதிப்பு, மரியாதையும் தந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக வீடான 4ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத் தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். தாயாப் பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்பதைப் போல எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம்.

மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். கழிவுநீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்சனையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். தங்க நகைகள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். ஆனால் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கணவன்மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உங்களின் தனபாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு அதிகரிக்கும்.

பெருந்தன்மையாக பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் சித்திரை 1,2ம் பாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபம் அதிகரிக்கும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு விரயாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்சனை சுமுகமாக முடிவடையும். அஸ்தம், சித்திரை 1,2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் உருவாகும்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிள்ளைகளின் வருங்ககாலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் குடும்பத்தாருடன் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் வாகனத்தில் செல்லும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் கறாராக இருங்கள். யாராக இருந்தாலும் கையில காசு வாயில தோசைன்னு சொல்லிடுங்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள்.

கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும், கருத்து மோதல்களும் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களை குறைக்கூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுவது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.

உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு வந்து நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் வலையில் இப்போது சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கல்யாணம் தடைபட்டு முடியும். மாணவமாணவிகளே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியப் போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். கலைத்துறையினர்களே! யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் புது வாய்ப்பு வரும். இந்த சனிப்பெயர்ச்சி மனப்பக்குவத்துடன் புதிய அணுகுமுறையில் பயணிக்க வைக்கும்.


Post a Comment