By December 1, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!


அடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டும் வேங்கைகளே! ஏறக்குறைய ஏழரை ஆண்டுகளாக உங்களை சனிபகவான் ஆட்டிப்படைத்தாரே. அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக 2ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களை கேளிக்கையாக்கி, கேள்விக்குறியாக்கிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள்.

எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்யம் அடைவீர்கள். நடைப்பயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் கூச்சல், குழப்பம் என்று நிம்மதியில்லாமல் தத்தளித்தீர்களே, இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அழகிய வாரிசு உருவாகும். வயசு ஏறிக் கொண்டே போகிறதே! ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.

சொந்த பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். அடிக்கடி இனி வீடு மாற்றத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததைப் போட்டு, கடனை உடனை வாங்கி சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். பலரின் உள்மனசில் என்ன நினைக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே! இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே, கல்யாணம் கிரகபிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். பலரும் வலிய வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அந்தஸ்து பெறுவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு
செய்வீர்கள். சிலசமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன்படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு.

கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். அண்டை மாநிலக் கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில்
வக்கரிப்பதால் வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். வெளிவட்டாரத்தில் நிதானித்து செயல்படுவது நல்லது. 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் கெடு பலன்கள் குறைந்து நல்லது நடக்கும். வியாபாரத்தில் இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள்.

விளம்பர யுக்திகளை சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும். உத்யோகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு. கன்னிப் பெண்களே! தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவமாணவிகளே! மதிப்பெண் உயரும். கலை, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றிப் பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசு விருது அளிக்கும். மறைந்து கிடந்த உங்களின் திறமை வெளிப்படும். இந்த சனிப்பெயர்ச்சி பழைய பிரச்னைகளை களையெடுப்பதுடன் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.


Post a Comment