By December 1, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

விரிவான சிந்தனையும், வேடிக்கையானப் பேச்சும், வினோதப் போக்கும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலா புறத்திலும் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்தாரே, எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே! இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள். இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! சிலர் உங்களை அசிங்கப்படுத்தினார்களே!

பலரையும் நம்பி ஏமார்ந்தீர்களே! யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்களே! கல்யாணம்,காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே! இனி இவையெல்லாம் மாறும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! சாப்பாட்டுக்கு முன், பின் என்று பல்வேறு மருந்து ,மாத்திரைகளை உட்கொள்ள நேர்ந்ததே, இனி உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே! இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார். என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல்வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிக உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து வந்து போகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டியது வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரங்கள் நினைப்பார்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவினங்களும் வந்துபோகும். ஆனால், விசாகம் 4ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலகட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பால்ய நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களால் திடீர் திருப்பங்களும் உண்டு. சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓய்வெடுக்க முடியாத படி அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும்.

பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்க மாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீன மயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.உத்யோகத்தில் நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிக சம்பளத்துடன் புதுவேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேருவார். நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடிவரும். அலுவலகத்தில் வீண்பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள்.

இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! கல்வி, காதல் என அனைத்திலும் தோற்றீர்களே! தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் தவித்தீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். நல்ல வேலையும் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள். மாணவ மாணவிகளே! புத்தகத்தைத் தொட்டாலே தூக்கம் வந்ததே, இனி அந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நீங்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். இந்த சனிப்பெயர்ச்சி இருளில் சிக்கியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துவருவதாக அமையும்.


Post a Comment