By December 2, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடையவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் புலம்பித் தவிக்காதீர்கள். பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட பலமுறை அலைந்து முடித்தீர்களே! இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமந்த பணமெல்லாம் வந்து சேரும்.

அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப் பார்க்கும். உடல் பருமனாக வாய்ப்பிருக்கிறது, எனவே, எண்ணெயில் வறுத்த, பொரித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீரைப் பருகுங்கள். காய்கறி, பழவகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மனைவிவழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.

இளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுபோனதே, இனி வங்கிக் கடனுதவியால் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். உங்களின் சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். மகளுக்கு இதோ அதோ என்று தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு சந்தையில் புதிதாக அறிமுகம் செய்த வண்டியை வாங்குவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆனால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு மாறுவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிள்ளைகளுக்கு தடைபட்டுக் கொண்டிருந்த
திருமணம் கூடி வரும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் நிர்வாகத் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த பொருள் இழப்பு வந்து நீங்கும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. சிலர் அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் தவறான ஆலோசனைகளை வழங்கக் கூடும்.

இனி கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரியின் பாரபட்சமற்ற செயலை எண்ணி வருந்தினீர்களே, பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். அனாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாதவிடாய்கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். மாணவ மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின்வரிசையில் அமராதீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம். இந்த சனிப்பெயர்ச்சி தோய்ந்து துவண்டிருந்த உங்களை புதுத் தெம்புடன் உலா வர வைப்பதாக அமையும்.


Post a Comment