By December 2, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக் கூடியவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாபவீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. உங்கள் ராசிநாதனான சனி பகவான் ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.

ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும், எதிலும் ஈடுபாடற்ற நிலையையும், மன உளைச்சலையும் தந்தாரே. நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே! குடும்பத்தில் சின்ன சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். கம்பீரமாக பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள்.

அவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தடைபட்ட குலதெய்வ பிராத்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களை சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதி மன்றம் செல்லாமல் முடிந்த வரை பிரசனைகளை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திய சொந்த
பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

சனி பகவானின் பார்வை பலன்கள்:

சனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர் பயணங்கள் குறையும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.01.2019 வரை மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்கள் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 வரை, 27.9.2019 முதல் 24.2.2020 வரை மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். வீட்டை கட்டி முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. புது வேலை கிடைக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள்.

மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.

கணினி துறையினர்களே, பதவிஉயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள். கன்னிப்பெண்களே! உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். திருமணம் கூடும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மாணவமாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள். நண்பர்களுடன் அனாவசியமாக சுற்றித்திரிவதை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றியுண்டு. கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகள் பட்டி தொட்டியெல்லாம் பரவும். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதாக அமையும்.


Post a Comment