By December 3, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: கும்பம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! உழைப்பு உங்களிடத்தில் மட்டும் இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்ததே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! அடுத்தடுத்து சோகச் செய்திகள் அதிகம் வந்து கொண்டு இருந்ததே, பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியதே! இனி இவையெல்லாம் மாறும்.

சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள்.

மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகளை தீர்க்க புது வழி பிறக்கும். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இதுவரை கண்டும் காணாமல் இருந்தவர்கள், இனி உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து பேசுவார்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். சகோதரங்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். சில நாட்களில் தூக்கமில்லாமல் போகும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும் போது கவனம் தேவை.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் அரைக்குறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் உடல்நலக்குறைவுகள் வந்து நீங்கும். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும்.

இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி புகழ்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவ மாணவியர்களே! எத்தனை முறை படித்தாலும் மண்டைக்குள் எதுவும் தங்கவில்லையே! இனி கற்பூரமாய் பற்றிக் கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினர்களே! இழந்த புகழை ஈடுகட்ட வேண்டுமென்று பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும். இந்த சனிப்பெயர்ச்சி விரக்தி, மன உளைச்சலிலிருந்து மீள வைப்பதுடன் வசதிகளை அள்ளித் தருவதாக அமையும்.


Post a Comment