By December 3, 2017 0 Comments Report

சனிப்பெயர்ச்சி 2017: மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..!!

அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்களே! பல இடங்களில் அவமதிக்கப்பட்டீர்களே! தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே! வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே! சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்த மோதல்கள் விலகும்.

பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைகளில் பல சிக்கல்கள் இருந்ததே, இனி முடிவுக்கு வரும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தீர்களே, இனி அந்த பணமெல்லாம் கைக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சி கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.1.2019 மற்றும் 12.8.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். அக்கம்பக்கம் வீட்டாருடன், உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருந்தும் செலவினங்கள் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். உத்யோகத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.

கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்னைகளால் நிலைகுலைந்து போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். மாணவமாணவிகளே! விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! முன்னனி கலைஞர்களுடன் அடிக்கடி மோதல் போக்கும் ஏற்பட்டதே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன், சமூக அந்தஸ்தையும் தருவதாக அமையும்.


Post a Comment